பாறையை உருக்கும் சித்து
Melting the Rocks Tricks
தமிழகத்தின்
பல இடங்களிலும் பாறைகளைக் குடைந்து குகை அமைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.
படத்தில் காண்பது ராஜபாளையம் அருகே உள்ள குன்றக்குடி மலைப்பகுதியில்
தே.கல்லுப்பட்டி.,தேவன்குறிச்சி மலை
உச்சிப்பகுதியில் மிக நீண்ட 15 அடி நீளம், 4 அடி அகல நுழைவு
வாயில் கொண்ட குகை உள்ளது
நவீன அறிவியல் இதற்கு பல அறிவியல் சாதனங்களை
கொடுத்துள்ளது. ஆனால் பழங்காலத்தில் எவ்வளவு சிரமமான செயல் இது? பாறைகளைக்
குடைந்து குகை செய்ய சில வழிமுறைகள் சித்தர்கள் (அகத்தியர்) பாடல்களில்
காணப்படுகின்றன. பாறைகளை உடைக்காமல் அவற்றை இளகச் செய்து தோண்டி எடுக்கும் தொழில்
நுட்பம் குறித்த அகத்தியரின் அந்த பாடல்கள் பின்வருமாறு..
வாசிநிலை
கண்டுசிவ யோகஞ்செய்ய
மகத்தான புலத்தியமா ரிஷியேகேளு
பேசவொண்ணா அந்தரங்க உண்மைதன்னை
பெரிதான எக்கியமா முனிதான்சொன்னார்
நேசமுடன் மலைகளிலே குகையுண்டாக்க
நீமகனே மனதுகந்த மலையிற்சென்று
பாசமுடன னால்புறமுஞ் சுத்திப்பார்த்து
பதிவான யிடமதிலே குகைதான்செய்யே
குகையறிந்து செய்வதற்கு வகையைக்கேளு
குருவான பூனீரு கல்லுப்போடு
தகையாத கரியுப்பு வெடியுப்யுத்தான்
சார்வான நவாச்சார மன்னபேதி
பகையான மலைபேதி மாங்கிசபேதி
பத்தியுள்ள கல்நாதம் கல்மதந்தான்
புகையாத அரபொடியுங் கல்காந்தம்சிங்கிட்டம்
புண்ணியனே சரக்குவகை பதிமூன்றாச்சே
ஆச்சப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்
அப்பனே சமபாகம் நிறுத்துக்கொண்டு
பாச்சப்பா கல்வமதில் பொடித்துநன்றாய்
பருசான யிரும்பினுட தாளிசேர்த்து
நீச்சப்பா யானைபரி கத்தம்விட்டு
நிசமான புலிகரடி ரெத்தம்வார்த்து
வாச்சப்பா கொள்ளவித்த தண்ணீர்விட்டு
மார்க்கமுடன் நவ்வலுட கம்பால்கிண்டே
கிண்டிநன்றாய் ரவியில்வைத்து தெளிவைநன்றாய்
கிருபையுட னத்தெளிவை மலைமேலூத்த
சுண்டுநன்றாய்ச் சுவடியது உவடுபோலே
சுத்தமுடன் பொங்கியது உப்பாம்பாரு
கண்டிதமாய் நீருண்டு கல்லுப்புப்போல்
கசிந்துமிக உருகுமடா அந்தவேளை
தொண்டதுபோல் கூந்தாளஞ் செய்துகொண்டு
திரமாக வெட்டியெடு குகைபோல்தானே
தானான உவர்நீரைப் பின்னும்விட்டு
தன்மனதுக் கேற்கவே குகைதான்செய்து
மானாகேள் குகையதுவும் நன்றாய்ச்செய்து
மகத்தான உவர்நீங்க வகையைக்கேளு
தேனான மதுஉடனே தண்ணீர்பாலும்
சிறுகரந்தைச் சாத்துடனே சேர்ந்துகொண்டு
கோனான குகையைநன்றாய்க் கழுவிப்போட்டால்
கொடுமையுள்ள உவர்நீங்கித் திறக்கும்பாரே
பாரப்பா யிவ்விதமாய்க் குகைதான்செய்து
பத்தியுட னதிலிருந்து தவமேசெய்வாய்
நேரப்பா தனித்திருந்து தவமேசெய்தால்
நினைவதிலே பாய்ந்துரவி யொளிதான்காணும்
சாரப்பா தனித்திருந்து ஒளிதான்பார்க்க
தலைமலைகள் கெவிகள்வனம் தனில்சென்றார்கள்
காரப்பா கண்ணொளியைக் கண்ணால்பார்க்க
கருத்துறவே தனித்திருந்து கண்ணைப்பாரே.
வாசி நிலை அறிந்து
சிவ யோகம் செய்வதற்கான அந்தரங்க உண்மை ஒன்றினை எக்கியமகா முனிவர் தனக்குச் சொன்னதாகவும், அதனை
அகத்தியர் தன் மாணவரான புலத்தியருக்கு சொல்வதாக இந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன.
மனதிற்குப் பிடித்த மலைக்கு சென்று, நான்கு பக்கங்களும் நன்றாக
சுற்றியலைந்து தகுதியான இடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டுமாம். அப்படி தெரிவு
செய்த இடத்தில் குகையை நாமே அமைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
பூநீர், கல்லுப்பு, கரியுப்பு, வெடியுப்பு, நவச்சாரம், அன்னபேதி, மலைபேதி, மாங்கிசபேதி, கல்நாதம், கல்மத்தம், அரப்பொடி, கற்காந்தம், சிங்கிட்டம்
ஆகிய சரக்கு வகைகள் பதின்மூன்றையும் சம அளவாக நிறுத்து எடுத்து, அவற்றை
கல்வத்தில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை பெரிய
இரும்புத் தாளி ஒன்றில் போட்டுக் அத்துடன் யானைபரிகந்தம் விட்டு, புலிகரடி
ரத்தம் விட்டு,
அத்துடன் கொள்ளு அவித்த நீரையும் விட்டு நாவற் கம்பால்
நன்றாகக் கிண்டி,
இந்தக் கலவையை வெய்யிலில் வைக்க நன்கு தெளிந்து விடுமாம்.
பின்னர் தெளிந்த இந்த
திரவத்தை எடுத்து பாறையில் குகை செய்ய வேண்டிய பாகத்தில் ஊற்ற வேண்டுமாம். அப்படி
ஊற்றியதும் ஊற்றப்பட்ட பகுதியானது சுவடு போல பொங்கி உப்பாகுமாம். அந்த உப்பானது
நீரில் கரைந்து கொண்டிருக்கும் கல்லுப்பைப் போல கசிந்து உருக்குமாம். அந்த
நேரத்தில் தேவையான இடத்தை குறித்துக் கொண்டு. குறித்த பகுதியை குகை போல
வெட்டியெடுக்க வேண்டும் என்கிறார்.
வெட்டியெடுக்க
முடிந்த அளவு வெட்டியெடுத்த பின்னர் மேலும் தேவைப்பட்டால் இன்னும் அந்த திரவத்தை
ஊற்றி,
மேலும் ஆழமாக குகையை வெட்டிக் கொள்ளலாம் என்கிறார். பின்
மனதிற்கு குகையின் அளவு சரியானது என்று தோன்றியதும். அந்த நிலத்தில் கல்லுப்புபோல
ஏற்பட்ட கசிவு தன்மையை நிறுத்திடவும் வழி சொல்கிறார் அகத்தியர்.
தேனுடன் தண்ணீரும் பாலும், சிறுகரந்தை சாறும் சம அளவில் சேர்த்து குகையை நன்றாக கழுவி விட்டால் கொடுமையான அந்த உவர் கசிவு தன்மை நீங்கிவிடுமாம்.இப்படி குகையை செய்தபின் மன உறுதியுடன் அந்த குகையில் தனியாக இருந்து தவம் செய்தால் மனது ஒருமைப்பட்டு, சூரிய ஒளி போல் ஒரு ஒளியை புருவ மையத்தில் காணலாமாம். அப்படியான ஒளியை தரிசிக்கவே சித்தர்கள் வனங்களை நாடிச் சென்றார்கள் என்றும் சொல்கிறார். அத்துடன் அந்த ஒளியைப் பார்க்க தனிமையில் இருந்தே தவம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக